ஒரு சமூகம் ஒன்றிணைந்து அதிலே உள்ள சகலரையும் ஏதோ ஒரு வகையில் உறவினராகக் கொண்டு நடக்கின்ற குழுமத்தையே சமுதாயம் (Community)என்று கூறுவார்கள். இந்த சமுதாயத்தின் வாழ்வில் அதனுடைய நடைமுறைப் பண்பாடு/ பண்பாட்டுப் பழக்கம் என்பது மிக முக்கியமானவொன்றாகும். எந்த ஒரு சமுதாயமும் இயங்குவதற்கு அதனுடைய பண்பாட்டு நடைமுறைகள் மிகமிக முக்கியமானவை. இந்தப் பண்பாட்டு நடைமுறைகள் என்று கூறும் பொழுது அவை ஒரே நேரத்தில் அந்தச் சமுதாயத்தினுடைய வரலாற்றுப் பேறுகளையும், அவர்களுடைய நடைமுறைத் தேவைகளையும் மாத்திரம் அல்லாமல், அவர்களுடைய நம்பிக்கைகள், அவர்களுடைய உறவின் பரஸ்பர தன்மைகள் ஆகியன யாவற்றையும் இணைத்துக் காட்டுவதாக இருக்கும்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக் கொள்வோமேயானால் ஒவ்வொரு கிராமமும் அல்லது கிராமத்தின் ஒவ்வொரு பகுதியும் சமுதாயங்களாகவே இருந்து வந்துள்ளன. இந்தச் சமுதாய இறுக்கம் இன்னுமொரு சற்று நவீனமயமாக்கப்பட்ட முறைமையிலே கடந்த – ஏறத்தாழ 50 வருட காலமாக யாழ்ப்பாணச் சமூக வாழ்க்கையிலே தெரியப்பட்டு வந்துள்ளது. அதனால் தான் ஒவ்வொரு சமூகக் குழுமத்தினரும் அல்லது சமுதாயக் குழுமத்தினரும் தங்களுக்கென ஒரு வாசிகசாலையையும் நூல் நிலையத்தையும் வைத்துக் கொள்வார்கள். அதிலிருந்து யார் யார் அந்தக் கிராமம் என்கின்ற பெரும் குழுமத்தினுள் சமுதாயங்களாக வாழ்கின்றனர் என்பதனை நாங்கள் இனங்காண முடியும். ஆனால் ஒட்டுமொத்தமான ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு, அந்தக் கிராம மக்களின் வாழ்க்கையை நாம் பார்க்க வேண்டுமேயானால், அந்தக் கிராமத்தில் உள்ள தொழில் முறைமைகள் யாவை? பாரம்பரியமான அல்லது நடைமுறைத் தொழில் முறைமைகள் யாவை? அந்தத் தொழில் முறைமைகளுக்கான உற்பத்தி முறைமைகள், அவற்றிற்கு வேண்டிய வளங்கள், அவற்றினுடைய கேள்விகள் எல்லாவற்றையும் உள்வாங்கி, அவர்களுடைய நாளாந்த அசைவியக்கத்தைக் காட்டுகின்ற முறையில் அமைகின்ற விடயங்களை ஒன்றாகத் தொகுத்து ஓரிடத்திலே வைத்திருப்பதன் மூலம் நாங்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக யாழ்ப்பாணத்துக்குக் கிராமம் ஒன்றை எடுத்துக் கொள்வோமேயானால் பெரும்பாலும் அங்கு ஒரு விவசாய குடியான தன்மை (Peasant Agriculture) ஒன்று காணப்படும். அங்கு ஒரு குறிப்பிட்ட உற்பத்தி முறைமை ஒன்று காணப்படும். அந்த உற்பத்தி முறைமை என்பது ஒரு அச்சாணியான விடயம். ஏனெனில் அந்த விவசாயமோ அல்லது விவசாய முறைமையோ எவ்வாறு இயங்குவது என்பதற்கு அது தான் எமக்கு களமாக இருந்து முழு உண்மையும் காட்டுகின்றது. யார் யார் ஈடுபடுகின்றார்கள்? எத்தகைய காணி புலங்களில் ஈடுபடுகின்றார்கள்? அவர்கள் எவற்றை பயிர்களாக விளைவிக்கின்றார்கள்? அந்தப் பயிர்களை விளைவிப்பதற்காக பயன்படுத்துகின்ற சாதனங்கள் யாவை? தொழில் நுட்பங்கள் யாவை? அவற்றுக்கான பசளையானது அவற்றை எவ்வாறு பயன்படுத்து கின்றார்கள்;? அவை நவீனமான உத்திகளா அல்லது பாரம்பரிய உத்திகளா, அல்லது நவீனமும் பாரம்பரியமும் சேர்ந்த உத்திகளா? அவற்றை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார்கள்;? அதனாலே ஏற்படுகின்ற இலாபம் அல்லது உபரி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது? என்று இவை முழுவதையும் எடுத்துக் கொண்டோமேயானால் உண்மையில் அந்தக் கிராமத்திலுள்ள விவசாயத்தன்மையை / தோட்டச் செய்கையை மாத்திரம் அல்லாமல் அதனோடு அந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு மக்கட் குழுமங்களுக்குமுள்ள உறவுகளை நாங்கள் அறிந்து கொள்ளலாம். தோட்டத்துக்கு தொழிலுக்கென வருபவர்கள் யார், அல்லது தோட்டத்திலே நாங்கள் அறுவடை செய்த பின்பு யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும,; எவ்வாறு கொடுக்கின்றோம்;, சந்தைப்படுத்தல் எவ்வாறு நடைபெறுகின்றதுஇ யார் சந்தைக்குப் போகின்றார்கள், சந்தையினுடைய தன்மைகள் என்ன, என்பது மாத்திரமல்லாமல் இந்த உற்பத்தி முறைமைக்கு வேண்டியவையான கருவிகள் யாவை, இந்தக் கருவிகளுடைய தன்மைகள் யாவை, இவற்றிலே பாரம்பரியமானவை எவை, நவீனமானவை எவை, இவை எவை எவற்றிற்கு நாங்கள் சில புதுமைகளைக் கொண்டு வந்துள்ளோம் என்று - இவை யாவற்றையும் தொகுத்தெடுத்து ஓரிடத்திலே வைக்க முடியுமானால், உண்மையில் அந்தக் கிராமத்து வாழ்க்கையினை நாங்கள் எங்கள் கண்களால் நிதர்சனமாகக் காணக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு நாம் குறிப்பிட்ட உற்பத்தி முறைமையை மையமாகக் கொண்டு அதற்கு வேண்டிய பொருட்கள் யாவற்றையும் அல்லது அந்தக்கிராமம் அந்த உற்பத்தியோடு எவ்வாறு ஈடுபடுகின்றது என்பதனை ஒருங்கு சேர்த்துக் கொண்டு வருகின்ற பொழுது, சமூக மானிடவியலிலும் - சமூகவியலிலும் கூறப்படுகின்ற (Material Culture) புழக்கப் பண்பாடு அதாவது சாதாரண புழக்கத்திலுள்ள பண்பாட்டு நிலையை நாம் அறிந்து கொள்ளலாம். அங்கு எப்பொழுதும் ஒரு உற்பத்தி முறைமையே மேலோங்கி நிற்கும், ஆனால் சில கிராமங்களில் இரண்டு மூன்று வகையான உற்பத்தி முறைமைகள் இருக்க முடியும். விவசாயத்தை எடுத்துக் கொண்டால் - நெற்செய்கை ஒரு புறமாகவும், தோட்டச்செய்கை இன்னொரு வகையாகவும் அமைந்திருக்கும். ஆனால் தோட்டச்செய்கையில் அந்த மக்களுடைய ஈடுபாடு அதிகமாக இருக்கும். இது ஒரு நிலை. இன்னொரு கட்டத்தில், விவசாயம் ஒருபுறமாயிருக்க இன்னொரு புறத்தில் மீன்பிடி போன்ற தொழில்கள் முக்கியமானதாயிருக்கும். அத்தகைய கிராமங்கள் மிகக்குறைவு. இருந்தாலும் அவற்றை நாம் ஒன்று திரட்டிப் பார்ப்போமேயானால், அவற்றினுடைய தன்மைகள் எல்லாவற்றிலும் நாம் இரண்டும் இணைந்திருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சந்தை விடயங்களில் பொருள் கொள்வனவு விடயங்களில் எவ்வாறு இணைந்தும் தனித்தும் வாழ்கின்றன என்கின்ற நிலைமைகளைக் காணலாம், அப்போது அந்தக்கிராமம் பொதுவாக இருக்கின்றது என்பது எங்கே தெரியும் என்றால் கோயில், சந்தை போன்ற பொதுவிடயங்களில் நிச்சயமாகப் பாரம்பரியமாக ஒரு பொதுத்தன்மையைக் காணலாம்.
யாழ்ப்பாணத்து வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் ஒரு கிராமத்தினுடைய பொது நிலையமாக அந்தக் கிராமத்துக் கோயில்கள் விளங்குவதைக்காணலாம். நமது மரபின் படி கோயிலுக்குச் செல்லக்கூடியவர்கள், செல்ல முடியாதவர்கள் என்கின்றவர்கள் கூட அந்தக் கோயில்களிலே திருவிழாக்களுக்கு அவற்றினுடைய முகாமையில் அவர்களுக்கு இடமுண்டு. இவற்றையெல்லாம் நாங்கள் மனதிலே வைத்துக்கொண்டு குறுகிய அளவிலாவது வேண்டிய பொருட்களைச் சேர்த்து வைப்போமேயானால் அவை ஒரு அற்புதமான அருங்காட்சியகத்தை நமக்குத் தருவது மத்திரமல்லாமல், குறிப்பாக நமது மாணவர்கள், இளவயதினர் அந்த அந்தக் கிராமத்து வாழ்க்கை முறை எவ்வாறு இயங்குகின்றது என்பதனையும் நன்கு அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இணுவில் கந்தசுவாமி கோயிலடியில் இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது என்று நண்பர் ஞானசூரியர் என்னிடம்; குறிப்பிட்டபோது, ஒவ்வொரு உற்பத்தி முறைமையையும் அதனுடன் இணைந்தவற்றையும் மையமாகக் கொண்டு இந் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம்மால் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற விடயங்களைக் கொண்ட புழக்கப் பண்பாடு மிகத் தெளிவாகத் தெரியவரும். அதனை நாங்கள் சரியான முறையில் பேணுவோமேயானால் - வரும் சந்ததியினருக்குக் கூட நாங்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தோம் என்பதனைக் காட்டுவதாக முடியும் என நான் கூறினேன.;
இவ்வாறு கூறுகின்ற பொழுது ஒவ்வொரு கிராமமும் தங்களுக்கெனத் தனித்தனி அம்சங்களாக மற்றைக் கிராமங்களிலிருந்து தங்களைப்பிரித்துக் காட்டுகின்ற தனித்துவமான அம்சங்கள் யாவை என்பதனைப் பார்ப்பதற்கும், அதே வேளையில் தாங்கள் எல்லோரும் எவ்வாறு ஒரு பொதுப்பண்பாட்டிற்குள் வருகின்றோம் என்பதனையும் காட்டுகின்ற தன்மையாகவும் இருக்கும். இந்த விடயத்தில் நாங்கள் சற்று அகன்ற மனத்தோடு – திறந்த மனத்தோடு மற்றைய மதங்கள், மற்றைய தொழில் குழுமங்கள் போன்ற எல்லாவற்றையும், ஒட்டுமொத்தமாகவும் பார்க்கின்ற போதுதான் யாழ்ப்பாணம் பற்றிய – வடபகுதிபற்றிய – வடக்கு கிழக்கு பற்றிய ஒருமைப்பாடு / அடிப்படையான ஒருமைப்பாடு நமக்குத் தெரியும். இந்த முயற்சி மிகச் சிறப்பாக நடக்கவேண்டுமென்பது என்னுடைய பெருவிருப்பமாகும்.
பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி
தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
( நன்றி - இணுவில் அறிவாலயம் திறப்புவிழாச் சிறப்புமலர் - 2003)
No comments:
Post a Comment