சைவத்தமிழ் மக்களது இல்லங்களில் வெற்றிலைத்; தட்டங்களின் பாவனை தினசரி இருந்த காலம் ஒன்றிருந்தது.
வீட்டிற்கு வரும் எந்த ஒரு விருந்தினரையும் முதலில் அவர்கள் வெற்றிலை கொடுத்து உபசரித்தனர்.
இதற்காக வீடுகள் தோறும் அழகிய வெற்றிலைத்தட்டங்கள் அன்று பாவனையில் இருந்தன. இவை அனைத்தும் பித்தளையிலானவை. அழகிய வேலைப்பாடுகள் கொண்டவை.
கால் தட்டங்கள்
இவற்றுள் கால் தட்டங்கள் மிகவும் பிரசித்தமானவை. வட்டவடிவிலான சற்று உயரமான ஆசனத்தில் பொருத்தப்பட்டுள்ள தட்டங்களே கால்தட்டங்கள் என்று அழைக்கப்பட்டன. கலியாணம், பூப்புனித நீராட்டுவிழா போன்ற வைபவங்களில் இக்கால் தட்டங்களின் தேவைகள் பெரிதும் உணரப்படுபவை.
மணமகனுக்கோ, மணமகளுக்கோ, வளர்ந்து விட்ட மங்கை ஒருத்திக்கோ பால் அறுகு வைத்து நீராட்டும் வைபவங்களின் போது பாலையும் அறுகையும் வைப்பதற்குக் கால் தட்டங்களே வீடுகள் தோறும் பாவனையில் இருந்தன.
புளிக்காப்புச் சார்த்திய பின் இவற்றின் அழகே தனியானது. இவ்வாறான அழகுமிகு கால் தட்டங்களின் பாவனை இந்நாட்களில் மிக அரிதாகி விட்டது. அரும் பொருட்காட்சியகங்களில் பார்க்க வேண்டிய நிலையில் இன்று கால் தட்டங்கள் இருக்கின்றன.
No comments:
Post a Comment